ஒரு கடிதம் எழுதினேன்..

ஆருயிர் தோழிக்கு..

நம் முதல் சந்திப்பு எப்பொழுது எப்படி நேர்ந்தது என்பது தெளிவாய் எனக்கு நினைவில்லை.. வாழ்கையின் ஓட்டத்தில் பலரை சந்தித்தாலும் நம் மனதில் அவர்களின் சுவட்டை பதித்து செல்பவர்கள் வெகு சிலரே.. அப்படி நீ என்னுள் பதித்த முதல் சுவடு இன்னும் என் நினைவில் பசுமையாய்.. 2007-ஆம் ஆண்டின் பிறந்தநாள் அன்று.. எனக்காக அர்ச்சனை செய்ய என்னை பற்றிய விவரங்களை நீ கேட்ட நொடி.. உன் தாயின் ஆசிர்வாதங்களும் உடன் சேர்த்து எனக்கு அளித்த நொடி.. என் மேல் இத்தனை அன்பா என்று வியக்கவைத்தாய்.. அதற்க்கு பின் வந்த பல நாட்களில்.. நீ சாப்பிட மறுக்கும் ஒவ்வொரு முறையும் உன்னை சாப்பிட வைக்கையில் ஏனோ எனக்கு ஒரு சிறு குழந்தையை அதட்டி மிரட்டி சாப்பிடவைப்பது போல் தோன்றும்.. நான் மிகவும் ரசித்த வினாடிகள் அவை..

நாட்கள் செல்ல செல்ல நம் நட்பும் வளர்ந்துகொண்டே தான் வந்தது.. ஒவ்வொரு நிகழ்வும் அதை இன்னும் அழகானதாகவும் ஆழமானதாகவும் தான் வளர்த்துக்கொண்டிருக்கின்றது.. ஒவ்வொரு முறை வெளியில் செல்லும் பொழுதும் நாம் அடித்த கூத்துகள்.. செய்த கலாட்டாக்கள்.. அலுவலகத்தில் என்ன தான் எல்லோரையும் கலாய்த்தாலும் நமக்குள் என்று வரும்பொழுது நாம் மூவரும் ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் மற்றவர்கள் காலை வாரிவிடுதல்.. எல்லாம் பசுமரத்தாணியாய் என் நெஞ்சில்..

உனக்கு மட்டும் தோழியாய் இல்லாமல் உன் குடும்பத்தார் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி.. அவர்களும் பொழிந்த பாச மழை.. உன்னவன் ஊருக்கு செல்கையில் என்னிடமும் சொல்லிவிட்டு சென்ற நொடி.. நானும் உன் குடும்பத்தில் ஒருத்தி என்று நெகிழ்ந்த நொடிகள்..

நான் முடிவெடுத்த ஒரு விஷயம் தவறென்று நீ திட்டியபொழுது என் மேல் உள்ள அக்கறையில் சொல்கிறாய் என்று உணர்ந்திருந்தாலும் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுக்காமல் இருந்தேன். ஆனால் நான் எடுத்த அதே முடிவை என் நெருங்கிய நண்பன் ஒருவனும் எடுக்க அன்று அவனுக்காக வருத்தப்பட்ட நொடி தான் உணர்ந்தேன்.. நீ எந்த அளவுக்கு எனக்காக வருத்தப்பட்டிருப்பாய் என்று.. என் மேல் நீ இவ்வளவு அன்பை பொழியும் அளவிற்கு என்ன செய்தேன் என்று எனக்கு புரியவில்லை.. ஆனாலும் உன் அன்பு மழையில் ஆனந்தமாய் நனைந்துகொண்டிருக்கிறேன்..

இன்று உன்னை பிரியும் தருவாயில் உனக்கு தைரியமாய் ஆறுதல் சொல்லும் நான், எனக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ள இயலாமல் தவிக்கின்றேன்.. எப்படியும் சந்திப்புகள் நிகழும் பொழுது பிரிவுகளும் வாழ்வில் நிகழும் என்ற உண்மை புரிந்தாலும்.. பிரிவுகள் நிகழும் பொழுது நிச்சயம் சந்திப்புகளும் நிகழும் என்ற நம்பிக்கையுடன் உனக்கு விடையளிக்கின்றேன்.. என்றும் எப்பொழுதும் உனக்கான என் நட்பு கரம் விரிந்தே இருக்கும்..

என்றென்றும் நட்புடன்,
ஜி3

அது ஒரு அழகிய நிலாக்காலம்...

எப்பவுமே புது நண்பர்கள் வட்டம் ஆரம்பிக்கும்போது சந்தோஷமா இருக்கும்.. அப்படித்தான் எங்க ப்ளாக் உலக நண்பர்கள் வட்டம் ஆரம்பிச்சப்பவும்.. என் நண்பர்கள விட்டு பிரிஞ்சு புது கம்பெனில சேர்ந்து அங்கயும் பெருசா வேலை இல்லாம உட்கார்ந்திருந்தப்போ தான் ஆரம்பிச்சது ப்ளாக் உலக வாழ்க்கை.. ஆரம்ப காலத்துல நான், கேகே, நாட்டாமை ஷ்யாம், கில்ஸ், ப்ரித்ஸ், அருண் எல்லாம் சேந்து அடிச்ச கூத்துக்கு அளவே இல்ல..

போஸ்ட்ல ஏதோ ஒரு விஷயம் இருக்க.. சம்பந்தமே இல்லாம ஏதோ ஒரு விஷயத்த பத்தி கமெண்ட்ல கும்மி அடிச்சிட்டு இருப்போம்.. புதுசா ஏதும் பதிவு போட்டா இந்த க்ரூப்ல இருக்கற எல்லாருக்கும் மெயில் பறக்கும்.. மெயில் வந்ததும் அடிச்சு புடிச்சு ஓடிப்போய் யார் மொதல்ல கமென்ட் போடறாங்கங்கறது தான் மேட்டரே.. நான் பர்ஸ்ட் நீ செகண்டுன்னு சொல்லியே ஒரு பத்து கமெண்ட் ஓடிரும்.. இதுல முதல் கமெண்ட் போட சில பல அண்டர் கிரவுண்டு டீலிங் எல்லாமும் பண்ணி இருக்கோம்... அதை எல்லாம் இங்க பப்ளிக்கா சொல்லி பல ரகசியங்கள உடைக்க விரும்பலை :)

இந்த கும்பல்ல இருந்தப்போ ஒரு comfort level எங்களுக்குள்ள இருந்துது.. ஒருத்தர ஒருத்தர் டேமேஜ் பண்ணிக்கிட்டாலும் அது நிச்சயமா யார் மனசையும் புண் படுத்தற மாதிரி என்னைக்குமே இருந்ததில்லை.. எல்லாருமே அதை ஸ்போர்ட்டிவ்வாவே எடுத்துக்கிட்டதால செம ஃபார்ம்ல இருக்கும் எங்க கமெண்ட் செக்ஷன் எல்லாம்.. எங்க கமெண்டுகள பாத்து ஏங்க அவரை இவ்ளோ கலாய்ச்சிருக்கீங்கன்னு மத்தவங்க கேட்டாலும் கலாய்க்கபட்டவர் வந்து இதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க சும்மா அடிச்சு ஆடுங்கன்னு உசுப்பேத்தி விட்டு நல்ல டேமேஜ் வாங்கிக்குவார் :) முதல் கமெண்ட் போட்டா புளியோதரைனு ஆரம்பிச்சு.. அது அப்படியே சிக்கன் பிரியாணியா மாறி.. அப்புறம் பகார்டி வரை வந்துது.. இந்த கலாட்டால என் தலை ப்ரித்ஸ் தலை எல்லாம் அடமாணமா வெச்சு இவங்க பண்ண சேட்டைகள சொல்லி மாளாது..

சும்மா ஓவரா கலாய்க்கறேன்னு சொல்லி இந்த கில்ஸ், கேகே நாட்டாமை அருண் எல்லாரையும் ஒண்ணா சேத்து எதிர் கட்சினு ஒரு கூட்டணி ஆரம்பிச்சாரு.. அப்புறம் எங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.. கமெண்ட்ல கலாய்ச்சது பத்தாம எல்லாரும் ஒருத்தர மாத்தி ஒருத்தர் போஸ்ட் போட்டு கலாய்ச்சிட்டிருந்தோம் :)

சில பல கலாய்த்தல் பதிவுகள் உங்களுக்காக :)

* இதுக்கு முந்தின பதிவுல கில்ஸ் கலாய்க்கப்பட்டதால் அவர் வெகுண்டெழுந்து போட்ட பதிவு
* பிளாக் மக்கள் தொலஞ்சு போனா எப்படி விளம்பரம் பண்றாரு பாருங்க
* எங்க கும்பல் மக்கள் எல்லாம் Flight BA 420 ல போன கதை
* முப்பது நாளில் ப்ளாகிங் கத்துகிட்ட கதை.. (மூணு பாகம் :))
* தன்னை தானே கலாய்ச்சு பதிவு போட்டுகிட்ட நல்லவர் :)
* முப்பது நாளில் ப்ளாகிங் கத்துகிட்ட கதை.. விடுபட்டவை.. Part-1, Part-2
* எதிர் கட்சியின் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டங்கள்

இப்பவும் இவங்களை எல்லாம் கலாய்ச்சு பதிவு போட ஆசை தான்.. ஆனா இவங்க யாரும் வந்து படிக்கறாங்களா இல்லயான்றதே சந்தேகம்.. அவங்கள பத்தி போடற பதிவ அவங்களே படிக்கலைனா பதிவு போட்டு என்ன புண்ணியம் சொல்லுங்க :(

பிடிக்கும் உனை பிடிக்கும்...

எத்தனை பேருக்கு பயணம் செய்யறது புடிக்கும்னு தெரியலை. அப்படியே பிடிக்கும்னு சொன்னாலும் நிறைய பேருக்கு ரயில் பயணங்கள் தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க.. ஆனா எனக்கு ரயில்ல போறத விட பஸ்ல போறது தான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் ஜன்னலோர இருக்கை கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும். எங்கயாவது வெளியூர் பயணங்கள் போனா கண்டிப்பா எனக்கு ஜன்னலோர இருக்கை தான். நண்பர்களோட போனாலும் சரி.. குடும்பத்தோட போனாலும் சரி.. இது எழுதப்படாத விதி.. அப்படி குடுதுட்டாங்கன்னா அவங்க பொழச்சாங்க. நான் வேடிக்கை பாத்துக்கிட்டே என் கற்பனைல மூழ்கிடுவேன்.. இல்லாட்டி போய் சேர வேண்டிய இடம் வர்ற வரைக்கும் பேசியே அவங்கள ரப்ச்சர் பண்ணிடுவேன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் :)

இப்ப என்னடா திடீர்னு இவ பஸ் பயணத்த பத்தி ஆரம்பிச்சிட்டான்னு யோசிகறீங்களா? போன வாரம் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு கடைசி நேரத்துல தான் தெரியவந்துது.. என் வண்டி எனக்கு இப்படி ஏதாவது ரெஸ்ட் கெடச்சா தான் உண்டுன்னு அது பாட்டுக்கு பெட்ரோல் என் கிட்டயும் இல்லன்னு சொல்லிடுச்சு. அதனால வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு பஸ்ல போனேன். ஆனாலும் பஸ்ல போறப்போ.. பலதரப்பட்ட மக்களை பாக்கறப்போ.. வர்ற சந்தோஷமே தனி தான்.

தனக்கே கால் வைக்க இடம் இல்லாம பக்கத்துல இருக்கறவர கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நிக்க சொல்லிட்டு நண்பன் கிட்ட என் கால் மேல உன் கால வெச்சிக்கிட்டு நில்லுடான்னு சொல்ற ஃபுட்போர்ட் நண்பர்கள்.. புத்தக பையுடன் நிற்கும் குழந்தையிடம் எவ்ளோ நேரம் இப்படி பைய வெச்சிட்டு நிப்ப.. யார்கிட்டயாவது குடும்மான்னு சொல்ற நல்லுள்ளங்கள்.. யாரவது வாங்கிப்பாங்களா நம்பி குடுக்கலாம்னு ஒரு அச்சம் கலந்த குழப்பத்துடன் பார்க்கும் குழந்தை.. குடும்மான்னு கேட்டு வாங்கிக்கற பக்கத்து இருக்கை அம்மணி.. வழக்கமாய் வரும் பயணிகளிடம் நடக்கும் சரளமான உரையாடல்கள்... நிமிடத்திற்கு ஒரு முறை நடத்துனர் சொல்லும் "உள்ள போங்க.. கொஞ்சம் தள்ளி நிள்ளுங்க.. சில்லறையா குடுங்க.. " வசனங்கள்.. பேருந்து நிறுத்தங்களில், பேருந்தில் ஏற முடியாமல் தவிக்கும் பள்ளி செல்ல வேண்டிய மகனைப் பார்த்து கவலைப்படும் தாய்.. ஃபுட்போர்டடில் இருப்பவர்களின் பைகளை வாங்கிக்கொள்ளும் ஜன்னலோர இருக்கை பெண்.. சுற்றி நடப்பதை கவனிக்க கூட மனமில்லாமல் காதில் ஒரு ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறே பயணம் செய்பவர்கள்.. இன்னும் பலர்...

இவங்களை எல்லாம் பாக்கறப்போ நிச்சயம் உங்க கவலைய கொஞ்ச நேரமாவாது நீங்க மறக்கறது உறுதி :)

எனக்கு மூட் அவுட் ஆனா நான் செய்யற விஷயங்கள்ல ஒன்னு பஸ்ல பயணம் பண்றது. வண்டிய ஆபிஸ்லயே விட்டுட்டு பஸ் ஸ்டாப் போய் முதல்ல வர்ற பஸ்ல ஏறிடுவேன்.. அது எந்த டெர்மினஸ் போகுதோ அங்க இருந்து வீட்டுக்கு பஸ் ஏறுவேன்.. குறைந்தது ஒரு ரெண்டு மணி நேரமாவது பஸ்ல இருக்கற மாதிரி பாத்துப்பேன்.. கண்டிப்பா வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள மனசு கொஞ்சம் அமைதியாகிடும் :)

டிஸ்கி : இந்த ரசனை எல்லாம் எப்பவாவது பஸ்ல போனா மட்டுமே ரசிக்க முடியும்.. தினமும் பஸ்ல போக சொன்னா நிச்சயம் இதே ரசிக்கற மனநிலையோட எல்லாத்தையும் பாக்க முடியாதுன்னு ஒத்துக்கறேன் :)

2009-ன் முதல் சந்திப்பு..

இந்த புது வருஷம் தொடங்கினாலும் தொடங்குச்சு.. நாட்கள் வழக்கத்தை விட அதி வேகமா ஓடற மாதிரி இருக்கு.. நான் அவ்ளோ பிஜீ.... அரட்டை அடிக்கறதுலயும் ஊர் சுத்தறதுலயும் தான் ;)

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு ப்ளாக்கர் மீட் போடலாம்னு முடிவு பண்ணி எல்லாருக்கும் போன் பண்ணி கேட்டதுல வர்றேன்னு தெளிவா சொன்னது நான் [பின்ன மீட்ட அரேஞ்ச் பண்ற நான் இல்லாமலா ;) ], சி.வீ.ஆர்., கில்ஸ், என்ன கொடுமை புகழ் ஏஸ் & எம்.ஜி.நிதி மட்டும் தான். ஆர்.சுப்ராஸ் "நான் வர்றேனா இல்லயான்னு தெரியல.. முடிஞ்ச வரை வர முயற்சி பண்றேன்"னு சொன்னாரு.. ஆனா கடைசில அவர் வரலை.. வராதவங்கள அடுத்த மீட்ல பாத்துக்கலாம்னு விட்டாச்சு. சரியா 11 மணிக்கு திருவாண்மியூர்க்கு வர சொன்னா நம்ம கில்ஸ் ரொம்ப கரெக்டா 11.20க்கு வந்துட்டு இன்னும் மத்தவங்க யாரும் வரலியா? இதுக்குத்தான் நான் என்னைக்குமே சொன்ன டைம்க்கு வர்றதில்லைன்னு ஓவர் பந்தா.. என்ன கொடுமை சிங்கம்லே ஏஸ் இதுன்னு ஃபீல் பண்ணிட்டுடிருக்கும்போதே நம்ம ஏஸ் காரோட வந்தாரு (அட அவரோட கார் தாங்க.. நம்புங்க). நானும் கில்ஸும் அவரோட கார்ல ஏற கார் ECR-ல இருக்கற பஸேரா ரெஸ்டாரண்ட் நோக்கி பயணப்பட்டது.. அப்படியே போற வழில எம்.ஜி.நிதி & சி.வீ.ஆர் -அ பிக் அப் பண்ணிட்டு நாங்க அங்க போக 11.45 ஆயிடுச்சு..

வழக்கம் போல கேமராவும் கையுமா சி.வி.ஆர் பிஸியாக, கில்ஸும் எம்.ஜி.நிதியும் வெஜிட்டேரியன் மெனுவ முடிவு பண்ண, நான்-வெஜிட்டேரியன் மெனுவ ஏஸ் முடிவு பண்ணட்டும்னு விட்டாச்சு. ஹி..ஹி.. நம்ம் வேலை அவங்க ஆர்டர் பண்றதை எல்லாம் சாப்பிடறது மட்டும் தான்.. வழக்கம் போல எல்லாரும் சேந்து என்னை நல்லா கலாய்ச்சிக்கிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க.. கொஞ்சம் கூட இவங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லை பாருங்க.. எல்லா மீட்டையும் ஆர்கனைஸ் பண்றாளே ஒருத்தி.. அவள பாராட்டாட்டி கூட பரவாயில்லை.. இப்படி கலாய்க்காம இருக்கனும்னு தோனுதா இவங்களுக்கு.. இருக்கட்டும்.. அடுத்த மீட் அப்போ இவங்கள கவணிச்சிக்கறேன்.. முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க. சாப்பிட்டதுக்கு பில் கட்டினது நம்ம எம்.ஜி.நிதி தான்.. நீங்க குடுக்க வேண்டிய பல ட்ரீட்கள்-ல இந்த ட்ரீட் எதுக்குனு கேட்டா அவருக்கே பதில் சொல்ல தெரியல.. சரி.. அவருக்கே விடை தெரியாததால இந்த ட்ரீட் அக்கவுண்ட்ல எடுத்துக்கொள்ளப்பட மாட்டாதுன்னு எல்லாரும் ஒரு மனதாக முடிவு பண்ணிட்டோம் :)

அங்க இருந்து ஒரு 1.30 மணிக்கு கிளம்பி அடுத்த டார்கெட்டான மாயாஜால்-க்கு போனோம்.. கஜினி (ஹிந்தி) படத்துக்கு ஏற்கனவே டிக்கெட் புக் பண்ணிட்டதால எல்லாரும் கரெக்டா படம் போடற டைம்க்கு உள்ள போய்ட்டோம்.. படம் தமிழ விட நல்லாவே இருந்துது.. முக்கியமா அந்த க்ளைமாக்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துது.. சரி படம் முடிஞ்சதும் எல்லாரும் வீட்டுக்கு கிளம்பலாம்னு முடிவு பண்ணி சி.வி.ஆர் - அ அவருக்கு பஸ் வர்ற எடத்துல இறக்கி விட்டுட்டு நாங்க கதை அடிச்சிட்டே போயிட்டிருந்தோம்.. திடீர்னு எம்.ஜி.நிதி.. எல்லாரும் வேணா எங்க வீட்டுக்கு வாங்க நான் காபி போட்டு தர்றேன்.. உயிர் மேல ஆசை இல்லாதவங்க தைரியமா அதை குடிக்கலாம்னு கூப்பிட, அய்யா ராசா.. ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி? வேற நல்ல கடைலயே போய் ஜூஸ் குடிக்கலாம்னு முடிவு பண்ணி பெசண்ட் நகர்ல இருக்கற Fruit shop on Greams road கடைக்கு போனோம். அவங்க மூணு பேரும் ஏதேதோ ஜூஸ் ஆர்டர் பண்ண நான் உஷாரா எனக்கு தெரிஞ்ச ஃபல்லூடா ஆர்டர் பண்ணேன். கடைசில பாத்தா கில்ஸ் & ஏஸ் ஆர்டர் பண்ணதுக்கு சம்பந்தமே இல்லாத டேஸ்ட்ல ஏதோ ஜூஸ் வர மக்கள் காமெடி பண்ணிக்கிட்டே அதையும் குடிச்சு முடிச்சாங்க :) கடைசில நிதி, "எங்க வீட்டுக்கு வந்திருந்தா உங்க கண்ணு முன்னாடியே காபி தூள் எல்லாம் போட்டு கரெக்டா காபியே குடித்திருப்பேன் இல்ல"ன்னு உசுப்பேத்த.. ஆஹா.. ஆகுங்கய்யா எஸ்கேப்புன்னு எல்லாரும் வீட்டுக்கு கிளம்பியாச்சு :)