Showing posts with label கதை நேரம். Show all posts
Showing posts with label கதை நேரம். Show all posts

பனிவிழும் மலர்வனம்...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருந்த பவித்ரா தன் கோபத்தை அடக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். காலை 6 மணிக்கு கோவிலுக்கு வருவதாக சொன்ன சங்கர் இன்னும் வந்து சேரவில்லை. கோவிலில் கோபப்படக்கூடாது என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டே கோவிலை சுற்றிக்கொண்டிருந்தாள்.

சங்கர் வர்றதுக்குள்ள இவங்களை பத்தி ஒரு சின்ன இண்ட்ரோ.. சங்கரும் பவித்ராவும் ஒரே அலுவலகத்தில் கடந்த மூன்று வருடமாய் காதல் செய்து வருகிறார்கள். அட ஆமாங்க. அலுவலகத்துல இவங்க வேலை செய்யறதை விட காதல் செய்யற நேரம் தான் அதிகம். சங்கர் வீட்டிற்கு ஒரே பிள்ளை. பிள்ளையின் ஆசையே பெற்றோரின் ஆசைன்னு அவங்களும் இவங்க காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்க. பவித்ரா...
அட இதோ சங்கர் வந்துட்டான். இனி இங்க நடக்கறத நீங்க பாருங்க. நான் கேப் கிடைக்கறப்போ வந்து இண்ட்ரோவ கண்டினியூ பண்றேன்.

தன் முன் வந்து நின்ற சங்கரை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் ஒரு தூணின் அருகே சென்று அமர்ந்தாள் பவித்ரா. சங்கர் கிடைத்த சந்தர்ப்பத்தில் சந்நிதி சென்று கடவுளுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வந்து அவளுடன் அமர்ந்தான்.

"சாரி சாரி சாரி" வழக்கம் போல் சங்கர் தான் மௌனத்தை கலைத்தான்.
"பேசாத நீ. நான் என்ன எனக்காகவா கோவிலுக்கு வர சொன்னேன். உன் பிறந்தநாளுக்கு உனக்காக அர்ச்சனை பண்றப்போ நீ கூட இருந்தா நல்லா இருக்கும்னு தானே வர சொன்னேன். அதுக்கு கூட இப்படி லேட்டா வந்தா என்ன அர்த்தம்?"
"உனக்கு ஒண்ணு தெரியுமா?"
"என்ன?"
"நமக்காக நாம வேண்டிக்கறதை விட அடுத்தவங்களுக்காக நாம வேண்டிக்கிட்டா அதுக்கு பலன் அதிகம்?"
"இப்ப என்ன சொல்ல வர்ற நீ?"
"எனக்காக நான் வந்து வேண்டிக்கறதை விட நான் நல்லா இருக்கணும்னு நினைக்கற நீ எனக்காக வேண்டிக்கிட்டா அதுக்கு பலன் அதிகம். அதுக்கப்புறம் நான் எதுக்கு தனியா வேண்டிக்கணும்" என்று கேட்டவாறே அவளை பார்த்து கண்சிமிட்டினான் சங்கர்.
சற்றே யோசனையுடன், "வியாக்கியானம் எல்லாம் நல்லாதான் இருக்கு. அப்படினா நான் வேண்டினது கண்டிப்பா பலிக்குமா?" என்று வினவினாள் பவித்ரா
"நிச்சயமா"
"அப்பாடா இப்போ தான் சந்தோஷமா இருக்கு. எதுக்கும் இன்னிக்கு கொஞ்சம் நிறைய சாப்பிட்டு தெம்பா இரு நீ"
என்ன சொல்கிறாள் என்று புரியாத குழப்பத்துடன், "புரியலியே. அப்படி என்ன வேண்டிக்கிட்ட?"
"ஹிஹி.. நீ சொன்ன நேரத்துக்கு கோவிலுக்கு வராததால உனக்கு இன்னிக்கு நல்லா நாலு தர்ம அடி விழணும்னு வேண்டிக்கிட்டேன்"
மேலே பார்த்தவாறு இரு கரங்களை கூப்பி "ரொம்ப நன்றி பெருமாளே" என்றான் சங்கர்.
இப்பொழுது புரியாமல் விழிப்பது பவித்ராவின் முறையாயிற்று. "எதுக்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்ற நீ? கம்மியா வேண்டிக்கிட்டேன்னா? ஒரு வேளை 108 இல்ல 1008னு வேண்டியிருக்கணுமோ?"
"அடிப்பாவி.. அதுக்கு இல்லை. எப்பவுமே வேண்டுதலை வெளியில சொன்னா அது பலிக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படினா இப்போ நீ வேண்டிக்கிட்டதும் பலிக்காதில்ல.. அதான்." என்றான் கூலாக.
"அப்படியா.. பலிக்குதா இல்லையானு பாத்துடலாம்" என்றவாறே அவனை அடிப்பது போல் சைகையுடன் அவள் எழ
"ஹே.. பொறந்தநாள் அதுவுமா ஒரு அப்பாவி புள்ளைய அடிச்ச பாவம் உனக்கு வேணாம். சரி சரி மொறைக்காத. நேரமாச்சு கிளம்பலாம் வா. அம்மா உன்னை அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க"
"இப்பவா? இப்ப வீட்டுக்கு வந்துட்டு வந்தா ஆபீஸுக்கு லேட் ஆகிடுமே. சாயந்திரம் வரட்டுமா?"
"ஆபீஸா? அதெல்லாம் இன்னிக்கு போக வேண்டாம். உனக்கும் சேத்து நானே நேத்து லீவ் சொல்லிட்டேன். இன்னிக்கு ஃபுல்லா ஐயா கூட தான் நீ இருக்க போற" கூறிக்கொண்டே அவன் வண்டியை நோக்கி செல்ல, எதுவும் சொல்லத்தோன்றாமல் அவளும் அவன் பின்னால் நடந்தாள்.

வீட்டு வாசலில் இறங்கியதும் "ஒரு நிமிஷம்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டு வாசலில் சென்று நின்று "வாருங்கள் மகாராணி" என்று சேவகன் போல் சிரம் தாழ்த்தி அவளை வரவேற்க, அதை பார்த்து கொண்டிருந்த அவன் அம்மா புன்னகையுடன் "வாம்மா. நல்லா இருக்கியா?" என்று வாஞ்சையுடன் வரவேற்றார்.
"நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்டவாரே அவளும் வீட்டில் நுழைந்தாள்.
"நானும் நல்லா இருக்கேன்மா. என் புள்ளை இப்படி எல்லாம் பண்றானேனு பாத்து ஏமாந்துடாதமா. என் புள்ள ஐஸ் வைக்கறதுல கில்லாடி. நாம உஷாரா இல்லைன்னா தலைல மொளகாய் அரைச்சிட்டு அவனுக்கு ஆகவேண்டிய காரியத்தை சாதிச்சுக்குவான்".
"போச்சுடா மாமியாரும் மருமகளும் இப்பவே ஒண்ணு கூடிட்டீங்களா? கல்யாணத்துக்கப்புறம் என் கதி அதோ கதி தான் போல. அப்பா எங்கிருந்தாலும் உடனே உங்கள் பிள்ளையின் உதவிக்கு வரவும்" என்று உரக்க கத்தினான் சங்கர்.
அதை பார்த்து புன்னகைத்தவாறே அவன் தாய் "உங்கப்பா கார் இன்னும் வரலியே. ஏன்னு விசாரிச்சிட்டு வர்றேன்னு ட்ராவல்ஸ் வரைக்கும் போயிருக்காரு" என்றாள்
"ஏம்மா? எங்கயாவது வெளியில கிளம்பறீங்களா?" என்று கேட்டாள் பவித்ரா
"இவன் ஒண்ணும் சொல்லலியாமா உன்கிட்ட? இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. அதான் இன்னிக்கே உனக்கு கல்யாணப்புடவை எடுக்க காஞ்சிபுரம் போகலாம்னு சொல்லியிருந்தேன். கூட்டிட்டு வரப்போ அதை சொல்லலியா இவன்?"
"ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான்மா சொல்லலை நான்"

இவங்கள விட்டா பேசிக்கிட்டே இருப்பாங்க.. அப்புறம் கதை முடியற வரை நான் பவித்ரா பத்தி இண்ட்ரோ குடுக்காமலே விட்டுடுவேன் போல இருக்கு. அதனால இங்க நடுவுல புகுந்து என் வேலையை முடிச்சிடறேன். பவித்ராவுக்குனு குடும்பம் எதுவும் கிடையாதுங்க. அவளுக்கு இந்த அன்பு, பாசம், அக்கறை எல்லாம் புதுசு. தாய் தந்தை யாரென்றே அறியாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, ஒரு நல்லவரின் ஸ்பான்சர்ஷிப்பின் உதவியால் பட்டப்படிப்பு முடித்து மூன்று ஆண்டுகளுக்கு முன் சங்கர் வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தவள் தான் பவித்ரா. அலுவலகத்தில் கிடைத்த சங்கரின் நட்பு காலப்போக்கில் காதலாய் மாறினாலும் அவளுக்குள் ஒரு அச்சம் இருக்கவே செய்தது. சங்கரின் குடும்பத்தில் சொந்த ஊர் எது என்று கூட அறியாத தன்னை மருமகளாய் ஏற்றுக்கொள்வார்களா என்று. ஆனால் முதல் முறை சங்கர் அவன் வீட்டிற்கு அழைத்து சென்ற போது அவர்கள் எந்த தயக்கமும் இன்றி முழுமனதுடன் அவளை வரவேற்றது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அதை அவள் வாய்விட்டு கேட்கவும், அவர்கள் சிரித்து கொண்டே "எங்க பையனோட சந்தோஷம் தான்மா எங்களுக்கு முக்கியம். அவன் தேர்ந்தெடுத்த பொண்ணு நீ நல்ல குணவதியா இருக்கறப்போ எங்களுக்கு வேற எதுவுமே குறையாய் தெரியலை" என்று கூறி அவளை சமாதானப்படுத்தினார்கள். சரி இப்போ பேக் டூ கதை.

சங்கரின் அப்பா காருடன் வந்து சேரவும் நால்வரும் கிளம்பி சென்று காஞ்சிபுரத்தில் ஷாப்பிங் எல்லாம் முடித்துவிட்டு கோவிலுக்கு சென்று தரிசனங்கள் முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவு ஆகிவிட்டது. சங்கர் பவித்ராவை அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் இறக்கிவிட்டுவிட்டு,
"பிறந்தநாள் அதுவுமா எனக்கு எதுவும் பரிசு இல்லையா?" என்று ஆர்வமாக கேட்டான்.
தான் பரிசாக குடுத்த சட்டையை தானே அணிந்திருக்கிறான். இன்னும் என்ன பரிசு என்று குழப்பத்துடன் அவள் விழிக்க...
அவன் கன்னத்தை காட்டி "ஒண்ணே ஒண்ணு" என்று கேட்டான்.
அவன் நோக்கம் புரிந்து "காலைல வேண்டுதல் பலிக்காதுனு சொன்னியே இப்போ பலிக்கப்போகுது பாரு" என்று கையை ஓங்க, அவன் "போடி" என்று கூறிவிட்டு பைக்கை விருட்டென்று கிளப்பினான்.

*** முற்றும் ***

அவள் டைரியிலிருந்து சில குறிப்புகள்.. - II

மு.கு. : இவ்வளவு தாமதமா 2-வது பகுதி எழுதினதுக்கு மொதல்ல ஒரு மன்னிப்பு கேட்டுக்கறேன்.

முதல் பகுதி

அக்டோபர் 15, 2006.

நேற்றிரவும் அவன் என் கனவில் வந்தான். என் வீட்டில் ஏதோ விசேஷம். அவனை எல்லோரும் அதிக மரியாதையுடனும், பாசத்துடனும் நடத்துகிறார்கள். அவனும் உரிமையுடன் என் வீட்டினுள் வலம் வருகிறான். விசேஷத்திற்கு நான் எந்த புடவையை கட்டவேண்டும் என்பது உட்பட அவன் அபிப்ராயம் கேட்கப்படுகிறது. விழித்து எழுகையில் இவை மட்டுமே நினைவில் இருந்தது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவனைப்பற்றிய கனவுகள் வருகிறது. எனக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன இந்த கனவுகள். விடைகளைத்தேடி களைத்துப்போகிறேன். அவனைப்பற்றி நினைப்பதை நிறுத்த வேண்டும் என்று மூளைக்கு தெரிகிறது. ஆனால் மனதிற்கு? பகல் பொழுதுகளில் வேறு வேலைகளில் மனதை திசை திருப்ப என்னால் முயற்சி செய்ய முடியும். ஆனால் கனவுகளில் வருபவனை நான் எப்படி தவிர்ப்பது?


அக்டோபர் 18, 2006.

நேற்று ஒரு புத்தகத்தில் படித்தேன். மிகுந்த அசதியில் தூங்குபவர்கள் ஆழ்ந்த தூக்கம் தூங்குவார்களாம். அவர்களுக்கு அந்நிலையில் கனவுகள் தோன்றாதாம். முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதனால் நேற்று இரவு உணவு முடிந்ததும் மொட்டைமாடியில் காதில் வாக்மேனுடன் உடல் சோர்வுறும் வரை நடந்தேன். இறுதியில் இதற்கு மேல் முடியாது என்று உடல் மறுத்த நிலையில் உறங்க சென்றேன். வந்து படுத்தது தான் தெரியும். காலையில் எழுகையில் தான் நான் அடித்து போட்டது போல் உறங்கியது உரைத்தது. உடல் சற்று சோர்ந்திருந்தாலும் அவனைப் பற்றிய நினைவை ஒதுக்க முடிந்ததில் ஒரு உற்சாகத்துடனே நாளை துவக்கினேன். இன்றைய பொழுது இனிமையாகவே கழிந்தது. இனி தினமும் இதையே தொடரவேண்டும்.


நவம்பர் 2, 2006.

அலுவலகத்தில் என்னை பயிற்சிக்காக France நாட்டிற்கு செல்ல முடியுமா என்று கேட்டார்கள். ஒரு குழுவாக நாங்கள் 8 பேர் செல்வதால் பாதுகாப்பை பற்றி கவலை இருக்காது என்றார்கள். வருபவர்களில் பாதி பேர் என் நன்பர்கள் என்பதால் நானும் சரியென்று கூறிவிட்டேன். வீட்டில் என்ன சொல்வார்களோ என்று பயமாக இருந்த்து. "3 மாதம் தானே, அவளுக்கும் ஒரு நல்ல அனுபவமாய் இருக்கும் போய் வரட்டும் "என்று அம்மாவை அப்பா சமாதானப்படுத்தியது மனதிற்கு இதமாய் இருந்தது. மகளை பொத்தி பாதுகாக்க நினைக்கும் தாய், என் மேல் என்னை விட அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் தந்தை, இவ்வளவு அழகான குடும்பத்தை பெற என்ன தவம் செய்தேனோ?


பிப்ரவரி 10, 2007.

மூன்று மாத இடைவெளிக்கு பின் வந்ததில் வீட்டில் ஏகப்பட்ட உபசரிப்பு. ராஜ மரியாதை தான். உண்மையிலேயே அப்பா சொன்னது போல் நல்ல அனுபவமாகத்தான் அமைந்தது. நண்பர்களே குடும்பமாய், ஒருவருக்கு ஒருவர் துணையாய், ஆறுதலாய்.. சிறு சிறு சண்டைகள், ஊர் சுற்றல்கள், கூட்டாஞ்சோறு சமையல் என்று விடுமுறைகள் எல்லாம் அமர்களப்பட்டது. அலுவலகத்திலும் ஒழுங்காக பயிற்சியை முடித்து அங்கும் நல்ல பெயரை சம்பாதித்துக்கொண்டாயிற்று. வாழ்வே சந்தோஷமயமாய் தோன்றுகிறது.


ஜீன் 15, 2007.

வீட்டில சல்லடை போட்டு தேடி எனக்கான மாப்பிள்ளையை கண்டுபிடித்துவிட்டார்கள். பெயர் பிரவாகன். ஜாதகம் எல்லாம் பொருந்திவிட்டதாம். இரண்டு பக்கங்களிலும் பெரியவர்களுக்கு சம்மதம். இனி நானும் அவரும் தான் முடிவை சொல்ல வேண்டுமாம். "வெறும் புகைப்படத்தைப் பார்த்து ஒருவரை பிடித்திருக்கு என்றோ பிடிக்கவில்லை என்றோ எப்படி சொல்வது என்று எனக்கு புரியவில்லை" என்றதும், அம்மா "அவரும் இதைத்தான் சொன்னார்" என்றும், முடிவெடுக்கும் முன் என்னுடன் பேச வேண்டும் என்று கூறியதாகவும் சொன்னார்கள். சரி என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று நானும் நாளை மாலை சந்திக்க சம்மதம் சொல்லிவிட்டேன்.


ஜீன் 16, 2007.

இன்று மாலை அவரை காபி ஷாப்பில் சந்தித்தேன். ஒரு புன்னகையுடன் வரவேற்று சகஜமாய் பேசினார். ஒருவருக்கு மற்றொருவரை பிடித்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் இருவருமே இயல்பாய் உரையாட முடிந்தது. பொதுப்படையாக ஆரம்பித்த பேச்சு குடும்பம், படிப்பு, வேலை, பிற்கால திட்டங்கள் என்று தடம் மாறியது. முடிவில் கைகுலுக்கி பிரிகையில் அவர் மீது காதல் மழை பொழிய ஆரம்பித்துவிடவில்லை என்றாலும் அவரைப்பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் தோன்றி இருந்தது உணமை. வீட்டில் நுழைந்ததும் பார்வையாலேயே கேள்விகேட்ட அம்மாவிடம் அவருக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று சொன்னதும் அம்மாவின் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம். அந்த பக்கத்தில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்று தெரியவில்லை.


ஜீன் 17, 2007.

பிரவாகனின் வீட்டிலிருந்து அவருக்கும் இதில் சம்மதம் என்று தெரியவர வீடே கல்யாண கோலம் பூண ஆரம்பித்தது. என்னால் தான் அதில் முழுமையாய் ஈடுபட முடியவில்லை. மனதில் ஒரு சிறு குழப்பம். என் முந்தைய காதலைப்பற்றி அவரிடம் சொல்லவேண்டுமா வேண்டாமா? அதை சொல்லாமல் விட்டால் அது நான் அவருக்கு செய்யும் துரோகமா? ஆனாலும் இத்தனை காலம் பழகிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் மறைத்த ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்து பேசியவரிடம் எப்படி கூறுவது? அவர் மற்றவர்களைப் போல் இல்லை. என் வாழ்வின் சரி பாதி என்றாலும் அதை முடிவெடுத்த ஒரே நாளில் அந்த அளவிற்கு மனங்கள் நெருங்கிவிடுவதில்லையே. என்ன செய்வேன்?


ஜீன் 24, 2007.

இன்று அவரை சந்தித்தேன். என் குழப்பங்களுக்கு விடை கண்டுபிடிக்க என்ன வழியென்று யோசித்து இறுதியில் நான் படித்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் நிலையென என் நிலையை விளக்கி அவரிடமே விடையை தேடினேன். என் நிலை தான் அது என்று உணர்ந்தோ என்னவோ சிறிது அழுத்தமாகவே "அவள் அந்த பழைய காதலனை மறந்து அவள் கணவனை முழு மனதுடன் ஏற்று அவனுக்காகவே வாழப்போகிறாள் என்றால் இந்த பழைய கதைகள் எல்லாம் அவள் கணவனுக்கு அவசியமே இல்லை. அப்படி சொல்வதால் வீண் மனக்கஷ்டங்கள் தானே ஒழிய வேறேதும் நடக்கப் போவதில்லை. அதுவே அவளுக்கே இந்த திருமணத்தில் விருப்பமில்லையெனில் விஷயமே வேறு" என்றார். உண்மைதானே. முடிந்த ஒன்றைப் பற்றி பேசுவதால் மனக்கஷ்டத்தை தவிர எந்தவித பயனும் இல்லை என்கையில் அதைப்பற்றி பேசாமல் இருப்பதுதான் நல்லது. ஏனோ இன்று கடற்கரையில் பார்த்த சூரிய அஸ்தமனம் என் கண்களுக்கு என் குழப்பங்களின் அஸ்தமனமாய் தோன்றியது.

***** முற்றும் *****

அவள் டைரியிலிருந்து சில குறிப்புகள்..

மார்ச் 12, 2006.

இன்று வழக்கம் போல் நூலகத்திலிருந்து கொண்டு வந்திருந்த நாவலை படித்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் கண்கள் புத்தகத்தில் இருப்பதை படிக்கையில் மனதில் அந்த காட்சியும் அந்த வசனங்கள் பேசப்படுவது போலவும் ஒரு மாயை உருவாகும். இன்றும் அப்படி வசனங்கள் மனதில் ஓடுகையில் தான் அதிர்ச்சியுடன் உணர்ந்தேன். வசனங்களில் கதாநாயகனின் பெயர் வருமிடங்களில் எல்லாம் என் மனம் என்னையும் அறியாமல் அவன் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பதை. ஏன் அவன் பெயர்? என்று எனக்குள் எழும் கேள்விக்கு, சமீப காலமாய் அவனுடன் அதிகம் பேசுவதால் அவன் நினைப்பாக இருந்திருக்கலாம்.. வேறேதும் காரணங்கள் இல்லை என்று எனக்கு நானே சமாதானம் கூறிக்கொள்கிறேன்.


ஜூன் 25, 2006.

சில நாட்களாய் அவன் எனக்குள் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களை அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்தேன். இன்று அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்பது போல் அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அறிமுகப்படுத்தினான். முதலில் ஏதோ விளையாட்டாய் ஏமாற்றுகிறான் என்று நினைத்து அவனிடம் மேலும் விவரங்கள் கேட்க கேட்கதான் உண்மை உரைத்தது. அவன் விளையாடவில்லை என்று. அவனிடம் வாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு தனிமையை நாடினேன். நீண்ட நாட்களுக்கு பின் இன்று கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தேன்.


ஆகஸ்ட் 20, 2006.

இன்று அதிகாலை அவனுக்கு திருமணம். அவனை மணமேடையில் இன்னொரு பெண்ணுடன் பார்க்கும் சக்தி எனக்கில்லை. நண்பர்களிடம் அலுவலகத்தில் அவசர வேலை என்று பொய் உரைத்துவிட்டு நேராக கோவிலுக்கு சென்றுவிட்டேன். என் மனமும் உடலும் சோர்ந்து போகும் வரை கோவில் நடையை சுற்றினேன். ஆனாலும் இழக்க கூடாத ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்விலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. இனி வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியை மட்டும் எனக்களி ஆண்டவா என்று மட்டும் வேண்டிவிட்டு வந்தேன்.


அக்டோபர் 3, 2006.

இன்று அலுவலகத்தில் வேலை சற்று அதிகம். அசதியாக இருக்கவே அப்பாவை வந்து அழைத்து போக சொல்லியிருந்தேன். காரில் செல்கையில் அதில் ஒலித்த மெல்லிய கீதமும் அசதியும் கண்ணை சொக்கும் வேளையில்.. என் அருகில் அவன் அமர்ந்திருப்பது போலவும் இதமாய் என் தலையை வருடுவது போலவும் தத்ரூபமாய் என் உள்ளுணர்வு உணர, திடுக்கிட்டு விழித்து பார்த்தேன். என்னருகில் இருந்த இருக்கை காலியாகத்தான் இருந்தது. ஆனாலும் எப்படி? வெறும் பிரம்மையா? ஆனால் என் தலையை கோதிய அவன் ஸ்பரிசம் நிஜம் போலவே இருந்ததே?

- தொடரும்.

பி.கு. : எல்லாரும் தொடர் கதை எழுதறாங்களே நாமளும் எழுதினா என்னன்னு முயற்சி பண்ணினது தான். மத்தபடி இது என் டைரி குறிப்புகளும் கிடையாது. எனக்கு டைரி எழுதும் பழக்கமும் கிடையாது ;-))