ப்ரவாகத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்னைக்கு தான் இந்த ப்ளாகுக்கு ப்ரவாகம்னு பேர் சூட்டி பிள்ளையார் படம் போட்டு திறந்தமாதிரி இருக்கு. ஆனா அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போச்சு. ஆமாங்க இந்த ப்ரவாகம் தடையில்லாம பொங்கி நாளைக்கு வெற்றிகரமா தன்னோட இரண்டாவது ஆண்டுல காலடி எடுத்து வைக்குது. இந்த ஒரு வருஷத்துல நடந்ததெல்லாம் நினைச்சு பாத்தா நிஜமாவே மனசு நிறைஞ்சிருக்குங்க. எத்தனை நண்பர்கள், எத்தனை சந்தோஷ தருணங்கள், எத்தனை ட்ரீட்டுகள், எவ்வளவு பாச மழைகள்..

நான் இந்த ப்ளாக ஆரம்பிக்க காரணமா இருந்த என் பாசக்கார எதிர்கட்சி மக்களுக்கு (நாட்டாமை, கே.கே., கில்ஸ், அருண், பி.எஸ்.கே) என் முதல் நன்றிய சொல்லிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவங்க மட்டும் அன்னிக்கு என்கிட்ட ஆப்பு வாங்க மாட்டாம இருந்திருந்தா இன்னிக்கு நீங்க எல்லாம் என் தொல்லைல இருந்து தப்பிச்சிருக்க கூடும் ;))
என்ன பண்றது உங்க கெட்ட நேரமோ இல்ல என் நல்ல நேரமோ தெரியல.. என்கிட்ட மாட்டிட்டீங்க.. ஆனா வருந்தத்தக்க விஷயம் என்னன்னா என் எதிர்கட்சி மக்கள் எல்லாரும் இப்போ அவ்ளோ ஆக்டிவ்வா இல்ல:(( அவங்களும் இப்ப முழு மூச்சா ப்ளாக்கிங்ல இருந்தா சும்மா சூப்பரா கலை கட்டியிருக்கும் இந்த பதிவு.. அவங்கள ஓட்டியே கூட ஒரு பதிவ போட்டிருக்கலாம் ;))

சரி வேற என்ன எழுதறதுன்னு யோசிச்சப்போ இந்த ஒரு வருஷத்துல நம்மள ரொம்ப சந்தோஷப்படுத்தின நிகழ்ச்சிகள சொல்லலாம்னு யோசிச்சேன். நிறைய விஷயங்கள் இருந்தாலும் எல்லாத்தையும் போட்டா நல்லா இருக்காதில்லயா.. அதனால டாப் 3 மட்டும் இங்க.

1. என் முதல் பதிவுக்கு வந்த ஆதரவு. நான் யாருன்னு தெரியாதப்பவே வந்து அத்தனை பேரு வாழ்த்து சொல்லிட்டு போனத நினைச்சா இன்னிக்கும் ஆச்சர்யமா இருக்கு.

2. சமீபத்துல போன பெங்களூர் ட்ரிப். கடைசி 2 நாள்ல போகலாம்னு டிசைட் பண்ணி போயிட்டு வந்த ட்ரிப் அது. முதல் நாள் நைட் போய் இறங்கி மறுநாள் நைட் பஸ் ஏற்ற வரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு அனுபவிச்சேன். வாழ்நாள்ல மறக்க முடியாத ட்ரிப் அது. Thanks to ஜெயந்தி, ராம் & ஜி.

3. என் பிறந்தநாள். அன்னிக்கு வந்து குவிஞ்ச வாழ்த்த பாத்து நானே மலைச்சிட்டேன்.. உலகத்தோட எல்லா டைரக்ஷன்ல இருந்தும் வாழ்த்தி அசத்து புட்டீங்க எல்லாரும். அதுக்கு மேல சர்ப்ரைஸ் கிப்ட்னு வேற எக்கச்சக்கமா குடுத்து மக்கள் எல்லாரும் பாசமழை பொழிஞ்சு தாக்கிட்டீங்க. அதை பத்தி டீடெய்ல்டா பதிவு போட முடியாம போனதுக்கு ஒரு மாப்பு கேட்டுக்கறேன்.

இந்த பதிவுல ஒருத்திய பத்தி கண்டிப்பா சொல்லனும்னு நினைச்சேன். இவ மட்டும் ஓவர் பாச மழைல என்ன நனைய வைச்சிட்டிருக்கா. நான் எங்க போனாலும் வீட்டுக்கு வந்ததும் அம்மணிக்கு நான் பத்ரமா வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லி மெசேஜ் அனுப்பனும். இது அம்மணி எனக்கு குடுத்திருக்கற வேலை. எனக்கு புடிச்ச வேலையும் கூட.
என் பிறந்தநாளப்ப அவளுக்கு ஒடம்பு சரியில்லாதப்பவும் போன் பண்ணி வாழ்த்து சொன்னதோட நிக்காம கோப்ஸ் உங்கள ரொம்ப கலாய்க்கல.. அதனால நான் போஸ்ட் போட்டு கலாய்க்கறேன்னு களத்துல இறங்கி போஸ்ட போட்ட புண்ணியவதி. யாரதுன்னு தானே யோசிக்கறீங்க.. எல்லாம் நம்ம .::மை ப்ரெண்ட்::. தாங்க. அவ பேரச் சொல்லும் போதே முகத்துல ஒரு சின்ன சிரிப்பு வந்துடும். "என் தோழி"-ங்கற பெருமையும் பொசஸ்ஸிவ்னெஸ்ஸும் கலந்த புன்னகை அது. என்னோட ஆசை ஒரு வாட்டியாவது அவள நேர்ல பாக்கனும்ங்கறது தான். நடக்குதான்னு பாப்போம்.

ப்ரியநேரம் ப்ரியாவிற்கு வாழ்த்துக்கள்!!!

சமீபத்தில் தனது ரங்கமணியின் கரம் பற்றி இல்வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த "கண்ணாளனே" மற்றும் "காதல் யானை" புகழ் "ப்ரியநேரம் ப்ரியா"விற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் தாமதமான திருமண வாழ்த்துக்கள்.

மு.கு.1 : கே4கே கேக் போட்டோ போடாம பதிவு போட சொன்னதால இந்த வாட்டி நோ கேக். வெறும் க்ரீட்டிங்க்ஸ் தான் :))

மு.கு.2 : @கே4கே, அந்த க்ரீட்டிங்க்ஸ்ல கேக் இருந்தா அதுக்கு நான் பொறுப்பாளி இல்ல.. இல்ல.. இல்ல.. :P

1. தாமதமான திருமண வாழ்த்துக்கு ஒரு க்ரீட்டிங்க்ஸ் ;))


Send this eCard !



2. பிறந்தநாள் வாழ்த்துக்கு ஒரு க்ரீட்டிங்க்ஸ் :))


Send this eCard !



பி.கு. ப்ரியா, 2 க்ரீட்டிங்க்ஸ் போட்டிருக்கேன். கொஞ்சம் பெரிய்ய அமௌண்டா என் அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க. உங்க பேர சொல்லி ஒரு நல்ல ஹோட்டல்ல ட்ரீட் சாப்டுக்கறேன் ;))

டூ இன் ஒன் போஸ்ட்


First things First... நாளைக்கு (25th September) பிறந்தநாள் கொண்டாடற நம்ம சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இந்த கேக்க அவருக்கு சமர்ப்பிக்கிறேன் :-)

இப்ப உங்கள் கொடுமை டைம்ஸ்.. ஆர்வக்கோளாருல நானும் ஒரு கதை எழுதி இருக்கேன். படிச்சுபாத்துட்டு கமெண்ட் பொட்டில துப்பிட்டு போங்க..

தன் மனைவி தூங்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்தவன் அவள் மெல்ல அசைவதை பார்த்ததும் அவள் கண்ணத்தில் மெல்லிதாய் முத்தமிட்டு "குட்மார்னிங் டா செல்லம்" என்றான். புன்னகையுடன் அவனுக்கு குட்மார்னிங் சொல்லிவிட்டு எழுந்தவள் இருவருக்குமாய் காபி கலக்கிக் கொண்டுவந்தாள். அவள் தந்த காபியை ரசித்து குடித்துக்கொண்டே "இன்னிக்கு சமையல் ஏதும் பண்ண வேணாம் ஜானு. நாம வெளியில எங்கயாவது போலாம்" என்றான்.

"ஐயாவுக்கு ஆபீஸ்னு ஒன்னு இருக்கறதே மறந்துருச்சாக்கும்?"

"அந்த சொட்ட மண்டையனுக்கு ஒரு போன போட்டு சொல்லிக்கலாம். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை."

"அம்மாவ பாத்து ரொம்ப நாளாச்சு. நீங்க லீவுன்னா இன்னிக்கே போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாமா?"

"சான்ஸே இல்ல. இன்னிக்கு முழுக்க நீயும் நானும் மட்டும் தான். உங்கம்மாவ பாக்க, வர்ற ஞாயித்துக்கிழமை வேணா போலாம்."

அவன் பிடிவாத குணம் அறிந்தவள், அதற்கு மேல் அதைப்பற்றி பேசாமல் "அப்படின்னா ஐயா ப்ளான் எல்லாம் ஏற்கன்வே போட்டுடீங்க போல??" என்று தன் சந்தேகத்தை வெளியிட்டாள்.

புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தவன், "நீ போய் ரெடியாகு.. போ" என்று அவளை விரட்டினான்.

அவனுடன் வெளியில் செல்வதென்றால் அவளுக்கு மட்டும் கசக்கவா செய்யும்?? ஆர்வமாய் கிளம்பினாள். அன்று முழுக்க கோவில், ஷாப்பிங், படம், பீச் என்று ஊர் சுற்றிவிட்டு இரவு வீடு திரும்பியபொழுது இருவருமே களைப்பாகத்தான் உணர்ந்தார்கள். ஆனாலும் அவனுக்கு உடல் களைப்பைவிட மனதில் ஏற்பட்ட வருத்தமே பெரிதாகத் தோன்றியது. இன்று என்ன நாள் என்று அவளுக்கு நிஜமாகவே நினைவில்லையா? அவன் பிறந்தநாளை எப்படி மறக்க முடிந்தது அவளால்? சிறு சிறு விஷயங்களையும் மறவாதவள் இதை மட்டும் மறந்தது அவனுக்கு நிஜமாகவே வருத்தமாய் இருந்தது.

அவன் மனம் ஓராண்டு காலம் பின்னோக்கிச்சென்றது. அவன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவனுடன் வேலை பார்க்கும் அனைவரோடும் படம் செல்ல திட்டமிட்டிருந்தான். ஆனால் வசந்தி மட்டும் தான் தனியாக வருவதானால் வீட்டில் அனுமதி கிடைக்காது என்று கூறி அவள் தங்கை ஜானுவையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தாள். அன்று முதல் பார்வையிலேயே இருவருக்குள்ளும் தனக்கானவர்(ள்) இவர்(ள்) தான் என்று தோன்றிவிட, இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் இனிதே நடந்தது.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனை அவன் மனைவியின் குரல் நிஜ உலகத்திற்கு இழுத்து வந்தது. "ஏங்க மணி 11 ஆகுது. நீங்க படுக்கலியா? நாளைக்காவது ஆபீஸ் போற ஐடியா இருக்கா இல்ல நாளைக்கும் ஊர்சுத்தற ஐடியாவா?"

அவள் கிண்டலை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லாத்தால், அமைதியாய் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டான். ஆனாலும் அவனுக்கு உறக்கம் வராமல், அவனுக்குள் பல குழப்ப அலைகள். அவளையே எழுப்பி எப்ப்டி மறந்தாள் என்று கேட்டுவிடலாமா வேண்டாமா என்று கூட யோசித்தான். இப்படியே வெகு நேரம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவன் காதில் "என் ஆருயிர் கணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்ற வார்த்தைகள் விழுந்ததும் ஆச்சர்யமும் சந்தோஷமுமாய் எழுந்து அமர்ந்தான். அவள் சொல்லிமுடிக்கவும் கடிகாரம் 12 முறை அடிக்கவும் சரியாக இருந்தது. ஆக தனக்கு சரியாக நாளின் இறுதியில் வாழ்த்த தான் அவள் அன்று முழுவதும் அமைதியாய் இருந்திருக்கிறாள். மற்றபடி அவள் தனது பிறந்தநாளை மறக்கவில்லை என்பதே அவனுக்கு மகிழ்ச்சியை தர, அந்த மகிழ்ச்சி அவன் முகத்திலும் பிரதிபளித்தது. அவன் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க நினைத்தவள் "உங்களுக்கு ஒரு பரிசும் காத்துட்டிருக்கு" எனவும், என்னவென்று சிறு குழந்தையின் ஆர்வத்துடன் அவன் கேட்க, வெட்கத்துடன் தன் கையில் இருந்த டைரியை அவனிடம் நீட்டி அன்றைய தேதிக்கான பக்கத்தை படிக்க சொன்னாள்.

அந்த பக்கத்தை பார்த்தவனின் சந்தோஷத்தை கூற சொற்கள் தேவையாய் இருக்கவில்லை..புன்னகையாலும் பெருமிதத்தாலும் ஜொலித்த அவன் முகமே போதுமானதாய் இருந்தது.

"அட என் கள்வனே!
என் சுவாசத்தை
திருடிக் கொண்டது
நீ மட்டும்தான்
என்றே நினைத்திருந்தேன்
இப்பொழுதுதான் தெரிந்தது...
பங்கிற்கு
உன் ஜூனியரும்
வந்து விட்டானென்று...!!!"

ஒரு முறைக்கு இரு முறையாய் கடைசி வரிகளைப் படித்தவன், அவளை அள்ளி அணைத்து தன்னுடைய பரிசுகளை வாரி வழங்க ஆரம்பித்தான்.

பி.கு. கவிதை இம்சை அரசியிடமிருந்து ஜி3 செய்யப்பட்டது :-)