மு.கு. : இவ்வளவு தாமதமா 2-வது பகுதி எழுதினதுக்கு மொதல்ல ஒரு மன்னிப்பு கேட்டுக்கறேன்.முதல் பகுதி அக்டோபர் 15, 2006.
நேற்றிரவும் அவன் என் கனவில் வந்தான்.
என் வீட்டில் ஏதோ விசேஷம். அவனை எல்லோரும் அதிக மரியாதையுடனும், பாசத்துடனும் நடத்துகிறார்கள். அவனும் உரிமையுடன் என் வீட்டினுள் வலம் வருகிறான். விசேஷத்திற்கு நான் எந்த புடவையை கட்டவேண்டும் என்பது உட்பட அவன் அபிப்ராயம் கேட்கப்படுகிறது. விழித்து எழுகையில் இவை மட்டுமே நினைவில் இருந்தது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவனைப்பற்றிய கனவுகள் வருகிறது. எனக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன இந்த கனவுகள். விடைகளைத்தேடி களைத்துப்போகிறேன். அவனைப்பற்றி நினைப்பதை நிறுத்த வேண்டும் என்று மூளைக்கு தெரிகிறது. ஆனால் மனதிற்கு? பகல் பொழுதுகளில் வேறு வேலைகளில் மனதை திசை திருப்ப என்னால் முயற்சி செய்ய முடியும். ஆனால் கனவுகளில் வருபவனை நான் எப்படி தவிர்ப்பது?
அக்டோபர் 18, 2006.நேற்று ஒரு புத்தகத்தில் படித்தேன். மிகுந்த அசதியில் தூங்குபவர்கள் ஆழ்ந்த தூக்கம் தூங்குவார்களாம். அவர்களுக்கு அந்நிலையில் கனவுகள் தோன்றாதாம். முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதனால் நேற்று இரவு உணவு முடிந்ததும் மொட்டைமாடியில் காதில் வாக்மேனுடன் உடல் சோர்வுறும் வரை நடந்தேன். இறுதியில் இதற்கு மேல் முடியாது என்று உடல் மறுத்த நிலையில் உறங்க சென்றேன். வந்து படுத்தது தான் தெரியும். காலையில் எழுகையில் தான் நான் அடித்து போட்டது போல் உறங்கியது உரைத்தது. உடல் சற்று சோர்ந்திருந்தாலும் அவனைப் பற்றிய நினைவை ஒதுக்க முடிந்ததில் ஒரு உற்சாகத்துடனே நாளை துவக்கினேன். இன்றைய பொழுது இனிமையாகவே கழிந்தது. இனி தினமும் இதையே தொடரவேண்டும்.
நவம்பர் 2, 2006.
அலுவலகத்தில் என்னை பயிற்சிக்காக France நாட்டிற்கு செல்ல முடியுமா என்று கேட்டார்கள். ஒரு குழுவாக நாங்கள் 8 பேர் செல்வதால் பாதுகாப்பை பற்றி கவலை இருக்காது என்றார்கள். வருபவர்களில் பாதி பேர் என் நன்பர்கள் என்பதால் நானும் சரியென்று கூறிவிட்டேன். வீட்டில் என்ன சொல்வார்களோ என்று பயமாக இருந்த்து. "3 மாதம் தானே, அவளுக்கும் ஒரு நல்ல அனுபவமாய் இருக்கும் போய் வரட்டும் "என்று அம்மாவை அப்பா சமாதானப்படுத்தியது மனதிற்கு இதமாய் இருந்தது. மகளை பொத்தி பாதுகாக்க நினைக்கும் தாய், என் மேல் என்னை விட அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் தந்தை, இவ்வளவு அழகான குடும்பத்தை பெற என்ன தவம் செய்தேனோ?
பிப்ரவரி 10, 2007. மூன்று மாத இடைவெளிக்கு பின் வந்ததில் வீட்டில் ஏகப்பட்ட உபசரிப்பு. ராஜ மரியாதை தான். உண்மையிலேயே அப்பா சொன்னது போல் நல்ல அனுபவமாகத்தான் அமைந்தது. நண்பர்களே குடும்பமாய், ஒருவருக்கு ஒருவர் துணையாய், ஆறுதலாய்.. சிறு சிறு சண்டைகள், ஊர் சுற்றல்கள், கூட்டாஞ்சோறு சமையல் என்று விடுமுறைகள் எல்லாம் அமர்களப்பட்டது. அலுவலகத்திலும் ஒழுங்காக பயிற்சியை முடித்து அங்கும் நல்ல பெயரை சம்பாதித்துக்கொண்டாயிற்று. வாழ்வே சந்தோஷமயமாய் தோன்றுகிறது.
ஜீன் 15, 2007.
வீட்டில சல்லடை போட்டு தேடி எனக்கான மாப்பிள்ளையை கண்டுபிடித்துவிட்டார்கள். பெயர் பிரவாகன். ஜாதகம் எல்லாம் பொருந்திவிட்டதாம். இரண்டு பக்கங்களிலும் பெரியவர்களுக்கு சம்மதம். இனி நானும் அவரும் தான் முடிவை சொல்ல வேண்டுமாம். "வெறும் புகைப்படத்தைப் பார்த்து ஒருவரை பிடித்திருக்கு என்றோ பிடிக்கவில்லை என்றோ எப்படி சொல்வது என்று எனக்கு புரியவில்லை" என்றதும், அம்மா "அவரும் இதைத்தான் சொன்னார்" என்றும், முடிவெடுக்கும் முன் என்னுடன் பேச வேண்டும் என்று கூறியதாகவும் சொன்னார்கள். சரி என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்று நானும் நாளை மாலை சந்திக்க சம்மதம் சொல்லிவிட்டேன்.
ஜீன் 16, 2007. இன்று மாலை அவரை காபி ஷாப்பில் சந்தித்தேன். ஒரு புன்னகையுடன் வரவேற்று சகஜமாய் பேசினார். ஒருவருக்கு மற்றொருவரை பிடித்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் இருவருமே இயல்பாய் உரையாட முடிந்தது. பொதுப்படையாக ஆரம்பித்த பேச்சு குடும்பம், படிப்பு, வேலை, பிற்கால திட்டங்கள் என்று தடம் மாறியது. முடிவில் கைகுலுக்கி பிரிகையில் அவர் மீது காதல் மழை பொழிய ஆரம்பித்துவிடவில்லை என்றாலும் அவரைப்பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் தோன்றி இருந்தது உணமை. வீட்டில் நுழைந்ததும் பார்வையாலேயே கேள்விகேட்ட அம்மாவிடம் அவருக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று சொன்னதும் அம்மாவின் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம். அந்த பக்கத்தில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்று தெரியவில்லை.
ஜீன் 17, 2007.
பிரவாகனின் வீட்டிலிருந்து அவருக்கும் இதில் சம்மதம் என்று தெரியவர வீடே கல்யாண கோலம் பூண ஆரம்பித்தது. என்னால் தான் அதில் முழுமையாய் ஈடுபட முடியவில்லை. மனதில் ஒரு சிறு குழப்பம். என் முந்தைய காதலைப்பற்றி அவரிடம் சொல்லவேண்டுமா வேண்டாமா? அதை சொல்லாமல் விட்டால் அது நான் அவருக்கு செய்யும் துரோகமா? ஆனாலும் இத்தனை காலம் பழகிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் மறைத்த ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்து பேசியவரிடம் எப்படி கூறுவது? அவர் மற்றவர்களைப் போல் இல்லை. என் வாழ்வின் சரி பாதி என்றாலும் அதை முடிவெடுத்த ஒரே நாளில் அந்த அளவிற்கு மனங்கள் நெருங்கிவிடுவதில்லையே. என்ன செய்வேன்?
ஜீன் 24, 2007.
இன்று அவரை சந்தித்தேன். என் குழப்பங்களுக்கு விடை கண்டுபிடிக்க என்ன வழியென்று யோசித்து இறுதியில் நான் படித்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் நிலையென என் நிலையை விளக்கி அவரிடமே விடையை தேடினேன். என் நிலை தான் அது என்று உணர்ந்தோ என்னவோ சிறிது அழுத்தமாகவே "அவள் அந்த பழைய காதலனை மறந்து அவள் கணவனை முழு மனதுடன் ஏற்று அவனுக்காகவே வாழப்போகிறாள் என்றால் இந்த பழைய கதைகள் எல்லாம் அவள் கணவனுக்கு அவசியமே இல்லை. அப்படி சொல்வதால் வீண் மனக்கஷ்டங்கள் தானே ஒழிய வேறேதும் நடக்கப் போவதில்லை. அதுவே அவளுக்கே இந்த திருமணத்தில் விருப்பமில்லையெனில் விஷயமே வேறு" என்றார். உண்மைதானே. முடிந்த ஒன்றைப் பற்றி பேசுவதால் மனக்கஷ்டத்தை தவிர எந்தவித பயனும் இல்லை என்கையில் அதைப்பற்றி பேசாமல் இருப்பதுதான் நல்லது. ஏனோ இன்று கடற்கரையில் பார்த்த சூரிய அஸ்தமனம் என் கண்களுக்கு என் குழப்பங்களின் அஸ்தமனமாய் தோன்றியது.
***** முற்றும் *****